இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி : முரளிதரன், வார்னேவை விஞ்சிய அஷ்வின்

“சரியான நேரத்தில் சரியான பந்தை வீசினால் வரலாற்றையே மாற்ற முடியும். பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது என்பது எனது ரகசிய ஆயுதம். ஆதலால் சுழற்பந்து என்பது ஒரு கலை, அதை வீசும் அனைவராலும் மாஸ்டராகிவிட முடியாது”

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக, சுழற்பந்துவீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஷ்வினின் வார்த்தைகள் இவை.

உண்மையில் சுழற்பந்துவீச்சில் அஷ்வின் ஒரு மாஸ்டர்தான் (நிபுணர்தான்). ஏனென்றால் அஸ்வின் ஒரு ஓவர் வீசுகிறார் என்றால் அதில் 6 பந்துகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு தொடர்களில் அஷ்வின் தொடர்ந்து விளையாடுவார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தபின், ஊடகத்தினரைச் சந்தித்த ரவிச்சந்திர அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்தார்.

இடதுகை பேட்ஸ்மேன்களின் எதிரி என்று அஷ்வினை கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. அஷ்வின் எடுத்த டெஸ்ட் விக்கெட்டுகளில் பாதிக்கு மேற்பட்டவை இடதுகை துடுப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை.

எந்த பந்துவீச்சாளரும் சாதிக்காத வகையில், கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை துடுப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அஷ்வின் 255க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதாவது அஷ்வின் இதுவரை வீழ்த்திய 537 டெஸ்ட் விக்கெட்டுகளில் 255க்கும் விக்கெட்டுகள் இடதுகை துடுப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை. இடதுகை துடுப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அஷ்வின் விக்கெட் வீழ்த்தும் சதவீதம் 51% ஆக இருக்கிறது.

சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, மறைந்த ஷேன் வார்ன் ஆகியோர்கூட இடதுகை துடுப்பாட்டக்காரர்களுக்கு எதிராக 150 விக்கெட்டுகளை தாண்டவில்லை.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 முறை அஸ்வின் பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்துள்ளார். டேவிட் வார்னர்(11முறை), அலிஸ்டர் குக் (9 முறை), நியூசிலாந்து வீரர் டாம் லாதம் (8 முறை) என அஷ்வின் பந்துவீச்சில் வீழ்ந்த இடதுகை துடுப்பாட்டக்காரர்களின் பெயர் பட்டியல் நீள்கிறது.

அஷ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2015-16 சீசன் முக்கியமானது. 8 டெஸ்ட் போட்டிகளில் 336 ஓட்டங்கள் குவித்து 48 விக்கெட்டுகளையும் எடுத்தார். அந்த காலகட்டத்தில் 19 டி20 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்தார்.

அந்த ஆண்டில் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதையும், 2016-இல் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதையும் அஸ்வின் பெற்றார். ஐசிசி அறிவித்த டெஸ்ட் அணியில் 5 முறை அஸ்வின் இடம் பெற்றுள்ளார். 2011 முதல் 2020 வரையிலான பத்தாண்டுகளுக்கான சிறந்த டெஸ்ட் அணியிலும் அஷ்வின் இடம் பெற்றார். 2015-ஆம் ஆண்டு அஷ்வினுக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கௌரவித்தது.

இந்திய வீரராக அஷ்வின் பந்துவீச்சை இனி ரசிகர்கள் காண முடியாவிட்டாலும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரராக, டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் வீரராக அவரின் பந்துவீச்சைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

Recommended For You

About the Author: admin