பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி உட்பட மேலும் பலர் போலிப் பட்டங்களுடன் : பெயர் பட்டியல் வெளியானது !

அசோக ரன்வல மாத்திரமின்றி பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக, மின்சக்தி அமைச்சர் புண்ணியசிறீ குமார ஜெயக்கொடி, ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்டோரின் கல்வித் தகைமைகள், பட்டங்கள் உண்மையானவையா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாம் சி தொலவத்த தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முந்தைய பாராளுமன்றத்தில் சாதாரண தரத்தில் கூட சித்தி பெறாதவர்கள் இருந்த போதிலும், அவர்கள் அதனை மறைக்கவில்லை. தமது கல்வித் தகைமைகள் தொடர்பில் மக்களிடம் பொய் கூறவில்லை.
பாராளுமன்றத்தின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சபாநாயகர் இல்லாத கலாநிதிப் பட்டத்தை இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றியிருக்கின்றார்.
அவர் மாத்திரமின்றி இவ்வாறு மக்களை மேலும் பலர் ஏமாற்றியிருக்கின்றனர். பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி தன்னை விசேட வைத்திய

நிபுணர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், அவர் சாதாரண வைத்தியரொருவர் மாத்திரமே. அதேபோன்று,
நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலகவுக்கும் கலாநிதிப் பட்டம் இல்லை எனக் கூறப்படுகிறது.
மின்சக்தி அமைச்சர் புண்ணியசிறீ குமார ஜெயக்கொடிக்கும் உயர் கல்வித் தகைமை, பட்டம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பொய் கூறிய ஒவ்வொருவரதும் பட்டங்கள் பாராளுமன்ற இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 

ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர போன்றோரும் இந்த நிலைமையிலா இருக்கின்றனர் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
இங்குள்ளது தனிப்பட்ட  நபர்கள் குறித்து எமக்கு பிரச்னை இல்லை. ஆனால், இவர்கள் ஏன் மக்களுக்கு பொய் கூறினார்கள்.
அமைச்சரவை பேச்சாளரிடம் இது தொடர்பில் கூறிய போது நாம் இதனைப் பெரிதாக எண்ணவில்லை என்று கூறுகின்றார்.
மக்கள் நேரடியாக கேள்வியெழுப்பும் இவ்வாறான விடயங்களை அரசாங்கத்தால் உதாசீனப்படுத்த முடியாது.
அரசியலில் கல்வித் தகைமையை ஒரு பிரச்னையாகக் காண்பித்த தேசிய மக்கள் சக்தி இதற்கு நிச்சயம் பதிலளித்தே ஆக வேண்டும்- என்றார்.

Recommended For You

About the Author: admin