வடக்கு-கிழக்கில் நாளை முதல் (10.12.2024) நிகழவுள்ள காலநிலை மாற்றம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்நிலை டிசம்பர் 11 ஆம் திகதி அளவில் இலங்கை – தமிழ்நாடு கரைகளுக்கு அப்பாற்பட்ட தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாகவே நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமையும் படிப்படியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin