நாட்டின் பல பகுதிகளில் அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். அத்துடன் சதொச ஊடாக அரிசியை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் அங்கு அரிசி மற்றும் தேங்காய் என்பன கையிருப்பில் இல்லை எனவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம் தங்களது மாதாந்த நுகர்வு பொருட்களுக்கான செலவில் தற்போது அதிகளவாகப் பங்கினை அரிசிக்காகச் செலவிட வேண்டியுள்ளதாகவும் நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளார்.இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டரிசியை 230 ரூபாய் என்ற சில்லறை விலையில் விற்பனை செய்யுமாறு அரிசி விற்பனையாளர்களை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அவதானம் செலுத்தி இந்த விலையைப் பின்பற்றாத அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி விற்பனையாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சரிசியை 215 ரூபா என்ற மொத்த விற்பனை விலையிலும், 220 ரூபாய் என்ற சில்லறை விற்பனை விலையிலும், விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
அதேநேரம் இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசியை 220 ரூபாவுக்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராமை மொத்த விற்பனையில் 235 ரூபாவுக்கும், சில்லறை விற்பனையில் 240 ரூபாவுக்கும், கீரி சம்பா கிலோகிராம் ஒன்றை மொத்த விலையில் 255 ரூபாவுக்கும், சில்லறை விலையில் 260 ரூபாவுக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அனுகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படிஇ இந்த புதிய தீர்மானத்துக்கமையஇ நாடுஇ சம்பா மற்றும் பச்சை அரிசியின் சில்லறை விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் கீரி சம்பா அரிசி தற்போதுள்ள விலைக்கே விற்பனை செய்யப்படவுள்ளது.அதேநேரம் நாளாந்தம் அரிசி ஆலைகளிலிருந்து வெளிவரும் அரிசியின் அளவினைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகாரசபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அத்துடன் நெல் கொள்வனவிற்காக வர்த்தகர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் எனவும் அதனால் மக்களின் அரிசியை நுகரும் உரிமையில் கைவைப்பதனை தவிர்க்குமாறும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.