சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போது ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை மீண்டும் திருத்தியமைக்க முடியாது. அதில் காலதாமதங்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாதென வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இடைக்கால கணக்கறிக்கை மீது இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
எமக்கு பாரிய பொறுப்பொன்று சுமத்தப்பட்டுள்ளது. அதனை முழுமையாக பின்பற்ற அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் நீண்டகால திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அதற்காக ஒரு சிறந்த பொறிமுறையை கையாள வேண்டும். அதற்காகதான் நாடாளுமன்றத்தில் குறுகியகால தீர்மானங்கள் சில எடுக்கப்படுகின்றன.
அதன் ஒரு கட்டமாகதான இடைக்கால கணக்கறிக்கையொன்றை முன்வைத்துள்ளோம். இதில் நீண்டகால இலக்குகள் இல்லை. இடைக்கால கணக்கறிக்கையில் நீண்டகால பொருளாதாரத் திட்டங்களை முன்வைக்க முடியாது. என்றாலும், வரவு – செலவுத் திட்டத்தில் நீண்டகால இலக்குகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு முன்னோக்கி செல்வோம்.
நீண்டகால திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமும் ஒன்றும். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. அத்திட்டத்தை நிறுத்த முடியாது. அவ்வாறு செய்தால் நாடு பின்னோக்கி செல்லும். அதனால் இத்திட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை நீக்கி பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யவே எதிர்பார்க்கிறோம்.
நீண்டகால பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நகர உற்பத்தி பொருளாதாரம் அதிகரிக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிதான் நாம் பயணிக்கிறோம். 12ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட முன்னர் மீண்டும் இதில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சி கோருகிறது. அதற்கு கால அவகாசம் போதுமானதாக இல்லை. அவ்வாறு செய்யவும் முடியாது.
ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுகளின் பிரகாரம் கடன் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும். அடுத்த வருடம் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதில் எமக்கு சில இலக்குகள் உள்ளன. அதனால் இத்திட்டத்தை தொடர்ந்து இழுத்தடிப்பு செய்ய முடியாது.” என்றார்.