வாகனத்திற்கு பதிலாக எம்பிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீடு

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம் வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு உத்தியோகபூர்வ வாகனத்தை வழங்குவதற்குப் பதிலாக அவர்கள் பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

தேசிய மக்கள் கட்சியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம் வழங்கும் முடிவை அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களுக்கு அமைச்சுக் கடமைகளுக்காக உத்தியோகபூர்வ வாகனம் வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடரும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட தொகுதிக்கு செல்வதற்கு வாகனம் தேவைப்படுவதால், அரசாங்கம் வழங்க தீர்மானித்த உத்தியோகபூர்வ வாகனத்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்திருந்தது.

இதேவேளை, கடந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய வரியில்லா வாகன அனுமதி பத்திரத்தை தற்போதைய அரசாங்கம் வழங்காது என அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டாலும் இம்முறை அவ்வாறான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமைச்சர்களுக்கு புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது என கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin