ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட அறிவிப்பு இந்திய அரசாங்கத்துக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நோக்கில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், கடந்த ஒக்டோம்பர் 4ஆம் திகதி இலங்கை வந்திருந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து தமது வாழ்த்துகளை தெரிவித்த எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதியை இந்தியா வருமாறு கோரியிருந்ததுடன், மோடியின் வாழ்த்துச் செய்தியையும் கையளித்திருந்தார்.
இந்த நிலையில் பொதுத் தேர்தலின் வெற்றிபெற்ற பின்னர் கடந்த வாரம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா செல்ல உள்ளதாக கூறியிருந்தார்.
அமைச்சர் விஜித ஹேரத்தின் இந்தக் கருத்து புதுடில்லிக்கு சற்று அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியின் பயணத்துக்கான நிகழ்ச்சி நிரலை புதுடில்லி தயார் செய்திருக்காத நிலையிலும், இந்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னரும் இந்த தகவலை அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச தலைவர் ஒருவரது விஜயம் தொடர்பில் இருநாட்டு அரசாங்கங்களினதும் முழுமையான ஆலோசனைகளுக்குப் பின்னரே திகதிகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் இறுதிப்படுத்தப்படும். அமைச்சர் விஜிதவின் முன்கூட்டிய அறிவிப்பு இந்திய ஊடகங்களால் விசேட செய்திகளாக வெளியானமையால் புதுடில்லி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, இந்தியாவுக்குப் பின்னர் ஜனாதிபதியின் அடுத்த சர்வதேச பயணம் சீனாவுக்கானதாக இலக்காக இருக்கலாம் என்றும் கனிய எண்ணெய் இறக்குமதி தொடர்பில் அரசாங்கங்களுக்கு இடையில் நேரடி உடன்படிக்கைகளை ஏற்படுத்த ஜனாதிபதி விரும்புவதால் மத்திய கிழக்கை மையப்படுத்தி அவரது விஜயமொன்று விரைவில் இடம்பெறும் என்றும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.