கண்ணீருடன் டென்னிஸில் இருந்து விடைபெற்றார் ரஃபேல் நடால்!

”டென்னிஸ் ஜாம்பாவன்” என அழைக்கப்படும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால் (Rafael Nadal)சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து நேற்றைய தினம் கண்ணீருடன் விடைபெற்றுள்ளார்.

டெவிஸ் கோப்பை(Davis Cup) தொடரின் காலிறுதி சுற்றில் நெதர்லாந்து அணியை எதிர்த்து ஸ்பெயின் அணி களமிறங்கியது. இந்த டெவிஸ் கோப்பையுடன் ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருந்ததால், இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இப் போட்டியை நேரில் காண்பதற்காக ரஃபேல் நடாலின் மனைவி, குழந்தை, சகோதரி உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதே ரஃபேல் நடால் உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டார்.

பின்னர் 38 வயதான நடால் நெதர்லாந்து அணியின் போடிக் வான் டி-யை எதிர்த்து களமிறங்கினார். இப் போட்டியில் 4-1 என்று பின் தங்கிய நடால், பின்னர் ஆட்டத்தில் 4-3 என்று வேகமாக முன்னேறி சென்றார். ஆனால் முதல் இரண்டு செட்களையும் 6-4 , 6-4 என்ற நேர் செட் கணக்கில் கணக்கிலும் இழந்தார்.

இதன்பின் நெதர்லாந்து அணியின் டாலனை 7-6, 6-3 என்ற கணக்கில் அல்காரஸ் வீழ்த்தினாலும், இரட்டையர் பிரிவில் போடிக் வான் டி – வெஸ்லி கூட்டணி 7-6, 7-6 என்ற கணக்கில் அல்காரஸ் – மார்செல் கூட்டணியை வீழ்த்தியது. இதனால் ஸ்பெயின் அணி தோல்வியை சந்திக்க, ரஃபேல் நடாலின் பயணம் முடிவுக்கு வந்தது.

டெவிஸ் கோப்பையில் விளையாடி டென்னிஸ் வாழ்க்கையை தொடங்கிய நடால், தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தார். தற்போது டெவிஸ் கோப்பையின் கடைசி போட்டியிலும் தோல்வியடைந்து டென்னிஸ் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரஃபேல் நடால் பேசுகையில், ”அனைவருக்கும் குட்-பை சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அனைத்து சூழல்களிலும் எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். வாழ்வில் நடக்கவே இயலாத விடயங்களில் கூட குடும்பத்தினர் அனைவரும் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள்
அதேபோல் வெற்றியால் உச்சத்திற்கு சென்ற போதும், அவர்களால் தான் நான் நிதானமாகவும், அமைதியாகவும் இருந்திருக்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடந்தாலும், அதனை எளிமையாக கையாள முடியும் என்று நம்புகிறேன்.

அதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். டென்னிஸ் விளையாடமல் இல்லாமல் இருப்பது கடினம் தான். ஆனால் வாழ்க்கையில் நடந்த அனைத்து மாற்றங்களுக்கும் முறையான பயிற்சியும், அதற்கேற்ப தகமையை கொண்டதும் தான் காரணம். இதற்கு மேல் டென்னிஸ் விளையாட முடியாது என்று என் உடல் சொல்லிவிட்டது.

அதனை நான் ஏற்றுக் கொள்ளவேண்டும். நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். எனது பொழுதுபோக்கையே தொழிலாக மாற்ற முடிந்தது. கிராண்ட்ஸ்லாம் கோப்பைகள், வெற்றிக் கணக்குகள் உள்ளிட்டவை எல்லாம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் ரசிகர்களின் மனதில் ஒரு சிறிய கிராமமான மலோர்காவில் பிறந்த வளர்ந்த சிறந்த மனிதனாக நினைவில் இருக்க விரும்புகிறேன்” இவ்வாறு ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரஃபேல் நடாலின் இறுதிப் போட்டியை காண்பதற்கு ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச், செரினா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin