போதைப்பொருள் பாவனையும் அது தொடர்பான சமுதாய சீர்கேடுகளும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்று வடமாகாணத்திலும் துரிதமாகப் பரவி வருவது அண்மைய நாட்களில் மிக வேதனையுடன் அவதானிக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,
போதைப்பொருள் வைத்தியசாலைகளிலும் பாவனை
போதைப்பொருள் பாவனை பாடசாலைகளினுள் மாத்திரமன்றி, வைத்தியசாலைகள் வளாகங்ககளினுள்ளும் உள்நுழைய தொடங்கி உள்ளது.
காலத்தில் தனிமனித ஒழுக்கத்திலும் நற்பண்புகளிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்த வடபிரதேசம் இன்று போதை அரக்கனின் கோரப்பிடியில் சிக்குண்டு தனது சுயத்தையும் மாண்புகளையும் இழந்து நிற்கின்றது.
போதைப்பாவனையின் நேரடி மற்றும் மறைமுக விளைவுகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.
உளரீதியான மற்றும் சமூக ரீதியான பாதிப்புக்கள்
உடல்ரீதியான பாதிப்புக்களுக்கு மேலதிகமாக உளரீதியான மற்றும் சமூக ரீதியான பாதிப்புக்கள் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லதாய் உணரப்படுகின்றன.
போரினால் சிதைவடைந்த வட இலங்கையின் மீள் உருவாக்கத்தின் ஆன்மாவாய் கருதப்படும் இளம் சமுதாயம் போதையின்பால் அடிமையுண்டு தானும் அழிந்து தன் நாட்டையும் அழிவிற்குட்படுத்துவது வேதனையின் உச்சம்.
போதையுடன் தொடர்புடைய குற்றங்களில் நாளாந்தம் அடையாளப்படுத்தப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை நாளைய பிரளயத்தை கட்டியம் கூறி நிற்கின்றது.
போதைப்பொருள் பாவனை
இது நாம் விரைந்து செயற்படவேண்டிய தருணம். போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பரந்துபட்ட கட்டமைப்பை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது அனைவரினதும் கடமையாகும்.
போதைப்பொருள் பாவனையை தடுத்தல் என்பது தனியே போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்கண்டு சிகிச்சை அளிப்பதுடன் முடிந்து விடுவதில்லை.
போதைப்பொருள் நுகர்வோரை இனங்காணுதல், அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், அவர்கள் மீண்டும் தமது பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்தல், மீளவும் போதைப் பழக்கத்துக்குற்படாத வகையிலான அகப்புறச் சூழ்நிலைகளை உருவாக்குதல் மற்றும் தொடர் கண்காணிப்பு வலையமைப்பை ஏற்படுத்துதல் உள்ளடங்கலான ஓர் பல்பரிமாணப் பொறிமுறையாகும்.
இப் பொறிமுறைகளை உருவாக்கி வெற்றிகரமாகச் செயற்படுத்துவதன் மூலம் மாத்திரமே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான நிலைபேறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
இதனை நிறைவேற்றுவதில் வைத்தியர்களாகிய எமக்குள்ள தார்மீகக் கடைமையை உணர்ந்துள்ள நாம், தனியே சிகிச்சை அளிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது ஏனைய அனைத்துப் பொறிமுறைகளினூடும் எமது நேரடியான பங்களிப்பை நல்குவதென்னும் தீர்க்கமான முடிவினை மேற்கொண்டுள்ளோம்.
இதற்கு அனைத்து பொறுப்புமிக்க அதிகாரிகள், பெற்றோர் பொதுமக்கள் மற்றும் ஊடகத் துறையினரின் மேலான ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம் ” என்றுள்ளது.