இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் எதிர்வரும் 06 நாட்களுக்கு நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நைஜீரியா ஜனாதிபதி போலா அகமது தினுபு அழைப்பின் பெயரில் பிரதமர் மோடி இன்று சனிக்கிழமை அந்நாட்டிற்கு சென்றுள்ளார்.
17 ஆண்டுகளுக்குப் பின்னர் நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையும் அவரையே சேரும்.
இந்த பயணத்தின் போது அங்கு வசிக்கும் இந்தியர்களை அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் அந்நாட்டு ஜனாதிபதி போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து அவர் கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நைஜீரியா பயணத்தை நிறைவு செய்து பிரேசில் செல்லும் மோடி ரியோ டி ஜெனிரோ நகரில் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
இந்த மாநாட்டுக்கு பிரேசில் ஜனாதிபதி லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்குகிறார்.
அதனை தொடர்ந்து பிரேசில், கயானா செல்லும் பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.