தேர்தல் கடமையின் போது தமிழ் பொலிஸ் உட்பட மூவர் உயிரிழப்பு

தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சிவில் உத்தியோகத்தர்கள் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று காலை நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், குறித்த மூவரும் இயற்கை மரணம் அடைந்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய 33 வயதுடைய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் த. சுபாஸ் இவ்வாறு உயிரிழந்தார்.

மேலும், கெஸ்பேவ பொலிஸ் பிரிவிலுள்ள சிறி சதஹம் பிக்கு மடத்தின் வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரியாக பரிந்துரைக்கப்பட்ட பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதேவேளை, கொபேகனே பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையமொன்றில் ஊழியராக கடமையாற்றிய 57 வயதுடைய நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்த மூவருக்கும் பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

Recommended For You

About the Author: RK JJ