நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஹாலிஎல – வெலிமடை வீதியில் 100 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் கவனமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, இன்று (08) காலை புத்தளம் உட்பட பல பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளம் மாவட்ட செயலாளர் திரு எச்.எம்.எஸ்.பி. ஹேரத் புத்தளம் மாவட்டத்தில் இதுவரை ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அனர்த்த நிவாரண உத்தியோகத்தர்களிடமும் தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இன்று பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் உள்ள அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அக்குரணை நகரின் ஊடாக பாயும் பிரதான ஓயா மற்றும் வஹகல ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் அக்குறணை நகரின் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.