“அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது” – ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு.
அடுத்த ஐந்து வருடங்களில் கிராம மக்களின் வறுமையை இல்லாதொழித்து அந்த மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்தார்.
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அநுர இவ்வாறு குறிப்பிட்டார்.
“அரசாங்கத்தின் வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது. அரச அதிகாரிகளின் அனுபவமானது அரசாங்கத்தின் திட்டத்திற்கு பெரும் உறுதுணையாக இருக்கிறது.
அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இடையில் சில இடைவெளி காணப்படுகிறது. நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு இதுவரையில் அரச நிர்வாகம் செயற்பட்டு வந்த விதத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
நாட்டில் மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பணியாகும். மோசடி மற்றும் ஊழல் காரணமாக நாட்டின் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரச சேவையில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. அரச உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்காக அரச அதிகாரிகளுக்கு விசேட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் சேவைகளை குறைக்காமல் அரச சேவையில் மேற்கொள்ளப்படும் தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும்”- என்றார்.
இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில, செயலாளர் ஜயவீர பெர்னாண்டோ உட்பட குழு உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.