குறைக்கப்பட்ட எரிபொருள் விலை போதுமானதாக இல்லை – பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை போதுமானதாக இல்லை என பல்வேறு தரப்பினரும் குறிப்பிடுகின்றனர்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 371 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

அதேநேரம் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 6 ரூபாவால் குறைக்கப்பட்டு 313 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ஒக்டைன் 92 ரக பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைக்கப்படவில்லை.

இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்க தலைவர் லலித் தர்மசேகர, குறைக்கப்படாத கட்டணம் அரசாங்கத்துக்குச் செல்லுமாயின் அதனை தங்களது தரப்பு ஆசீர்வாதமாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் குறைக்கப்படும் கட்டணங்களின் பயன் பொதுமக்களைச் சென்றடைய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், கடந்த காலங்களில் எரிபொருள் கட்டணத்துக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும் அதனை குறைக்க முடியும் எனவும் கூறிய தரப்பினர் தற்போது எரிபொருள் விலையை குறைக்காமல் உள்ளதாக தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் தொழிற்துறை சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது குறைக்கப்படாத கட்டணம் கனியவள கூட்டுதாபனத்தின் தலைவருக்குச் செல்கிறதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் தற்போதைய எரிபொருள் விலை சூத்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் தொழிற்துறை சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin