பிரதமர் மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (31) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தாதியர் சேவையின் தரப்படுத்தலில் காணப்படும் தரப்படுத்தல் முரண்பாடு மற்றும் உத்தியோகபூர்வ பெயர் மறுசீரமைப்பை மேற்கொள்ளல், அலுவலக பணியாளர் பற்றாக்குறை, பயிற்சியை நிறைவு செய்த தாதியர்களுக்கென உரிய பதவி உயர்வு செயன்முறையை ஏற்படுத்தல், தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல், தாதியர் சேவைக் காலத்தை 63 வயது வரை நீடிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினர் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.
குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் தனிப்பட்ட செயலாளர் வைத்தியர் அசங்க விக்கிரமசிங்ஹ, அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர், உப தலைவர் ஆர்.கே.பட்டுவிட்ட, பொருளாலர் லக்ஷ்மி கொடிப்பிலியாராச்சி, நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எஸ்.கே.பிலிகல, காஞ்சனா ஹேமச்சந்த்ர, சுகாதார அமைச்சின் தாதியர் பணிப்பாளர் அசோகா அபேநாயக்க, தேசிய தாதியர் சங்கத்தின் தலைவர் கீர்த்தி வனசேகர உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பலரும் கலந்துகொண்டனர்.