ரணில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்: பிரதமர்

2015ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைக்கவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தமது அரசாங்கத்தில் பொது நிதியை தவறாகப் பயன்படுத்திய ஒவ்வொரு நபருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

“அரசியலமைப்பு தொடர்பான விளக்கம் எனக்கு தெரியவில்லையென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதுடன், அரசியலமைப்பை எனக்கு கற்பிக்க முன்வந்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க 17 முறை மக்களால் நிராகரிக்கப்பட்டார், அரசியலமைப்பின் முக்கிய கொள்கைகளில் ஒன்று மக்களின் இறையாண்மை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க இதை புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்.

“அவர் அதை புரிந்துகொண்டிருந்தால், அவர் தேர்தலை ஒத்திவைத்திருக்க மாட்டார், அரசியலமைப்பு சபையின் முடிவுகளுக்குக் கீழ்ப்படிய மறுத்திருக்க மாட்டார், அதன் உறுப்பினர்களை அச்சுறுத்தி அல்லது சாதகமான தீர்ப்புகளைப் பெற நீதித்துறையில் செல்வாக்கு செலுத்தியிருக்க மாட்டார்.

அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி எனக்குக் கற்பிக்கும் முன் அவர் முதலில் இந்த அடிப்படைக் கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, ரணில் விக்கிரமசிங்க தனது சொந்த விடயங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.

“மக்கள் எங்களுக்கு ஒரு ஆணையை வழங்கியுள்ளனர், அந்த ஆணையின்படி நாங்கள் எங்கள் கடமைகளைச் செய்கிறோம்.

எந்த சூழ்நிலையிலும் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆலோசனை பெறமாட்டோம். மத்திய வங்கியை மோசடி செய்தவர்களின் ஆலோசனைகள் எமக்கு தேவையில்லை.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மட்டுமன்றி, பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த ஒவ்வொருவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin