இந்தத் தேர்தலில் மக்களுக்கு கூறுவதற்கு விடயங்கள் இல்லாதவர்கள் பழைய கதைகளையே மீண்டும் கூறத்தொடங்கியுள்ளனர்.
புதியவர்களுக்கு அனுபவம் கிடையாதெனவும், பழக்கப்பட்டவர்களையே அனுப்பிவைக்குமாறும் அவர்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் கூறுகின்ற பழையவர்கள் திருட்டுகளுக்கு பழக்கப்பட்ட, சட்டத்தை முற்றாகவே மதிக்காமல் செயலாற்றுபவர்கள் என்பது ஏற்கெனவே அம்பலமாகி உள்ளது என காலியில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சாதாரண மனிதர் ஒருவரின் வாகன இலக்கத்தகடு வீழ்ந்திருந்தால், வீதியில் மிகவும் விழிப்புடன் கவனமாகவே பயணிப்பார்கள். ஆனால் அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் இருந்து கள்ளத்தனமாக கொண்டுவந்து திருட்டு இலக்கத் தகடுகளுடன் வாகனங்கள் செலுத்திநமை அம்பலமாகி உள்ளது.
அதைப்போலவே கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த வாகனங்களை இனந்தெரியாதவர்கள் கொண்டு வந்து முற்றத்தில் வைத்து விட்டுச் செல்வது இடம்பெற்று வருகிறது. அவர்கள் இதுவரை சட்டத்துடன் தொடர்பு இல்லாதவர்களைப் போன்றே இவர்கள் செயற்பட்டுள்ளார்கள்.
பொதுமக்கள் வாகனங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்களுக்கோ கள்ளத்தனமாக ஓட்டுவதற்கான ஆற்றல் இருக்கின்றது. அவர்கள் தற்போது மேடைகளில் கூறுகின்ற அனுபவம் அதுபோன்ற விடயங்களாகவே உள்ளன.
குற்றச் செயல்களைப் புரிந்து தலைமறைவாக இருப்பதற்கான, திருடி தப்பித்துக் கொள்வதற்கான, பொதுமக்களுக்கு மேலானவர்களாக இருப்பதற்கான அனுபவம் அவர்களிடம் உள்ளது.
இப்படிப்பட்டவர்கள் இருந்த பாராளுமன்றத்தையே மக்கள் வெறுக்கிறார்கள். பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கிறவர்களை நன்றாக பரிசோதிக்கிறார்கள். ஆனால் கள்ளத்தனமாக கத்திகள், மிளகாய்த்தூள் கொண்டுவர முடியும். பாராளுமன்றத்தில் கதிரைகளைத் தூக்கி அடிக்கலாம். மக்களுக்கெதிரான சட்டங்களுக்காக கைகளை உயர்த்தலாம்.
இவ்வாறான செயல்களுக்கே அவர்கள் பழகி இருக்கிறார்கள். சட்டத்துக்கு மேலாக இருந்துகொண்டு, பொதுப்பணத்தைக் கோடிக்கணக்கில் மோசடி செய்யவும் மக்களைவிட அதிகமான சிறப்புரிமைகளை அனுபவிக்கவும் அவர்கள் அனுபவம் பெற்றிருக்கிறார்கள்.
அத்தகைய பழக்கங்களைக் கொண்டுள்ளவர்களை மக்கள் அறவே வெறுத்திருக்கிறார்கள். பழக்கப்பட்டவர்களை பாராளுமன்றம் அனுப்பி வைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி இன்றும் கூறியிருக்கிறார். நல்லவர்களால் பாராளுமன்றத்தை நிரப்புமாறே நாங்கள் கூறுகிறோம்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பாக முன்வந்துள்ளவர்கள் பாராளுமன்றத்திற்கு புதியவர்களாக இருந்தபோதிலும் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல. எந்தவொரு நேரத்திலும் நாடு அனர்த்தமொன்றை சந்திக்க நேரிட்டால் அதற்காக முன்னிற்பவர்கள். மக்களின் பணத்தை திருடியதற்கு எதிராக குரலெழுப்பியவர்களே இருக்கிறார்கள்.
இந்த நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக அவற்றை பாதுகாத்துக் கொள்வதற்காக எந்தவொரு தருணத்திலும் முன்வந்தவர்களே இருக்கிறார்கள். இந்த நாட்டில் எங்கேயாவது ஓரிடத்தில் அநீதி ஏற்படுமானால் அதனை எதிர்த்து அரசியல் புரிந்தவர்களே என தெரிவித்தார்