முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவிற்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்படலாம்!

ஜனாதிபதிகளுக்கான சட்ட விலக்குரிமை சம்பந்தமாக மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படும் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்படும் பின்னணி உருவாகும் என தெரியவருகிறது.

மைத்திரியை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோட்டை நீதவான் திலின கமகே அழைப்பாணை விடுத்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்துக்கொண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக தகவல்களை அறிந்தும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று அழைப்பாணை விடுத்திருந்தார்.

நீதவான் நீதிமன்றத்தின் இந்த அழைப்பாணையை சவாலுக்கு உட்படுத்தி அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

கோட்டாபயவிற்கு எதிரான பழைய வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படலாம்
அவ்வாறான சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதனை முன்னுதாரணமாக கொண்டு கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகும் பின்னணி கட்டாயம் உருவாகும் என கூறப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த இரண்டரை ஆண்டு காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயற்பட்டமை, நாட்டின் கமத்தொழில் துறையை அழித்தமை, பொருளாதார வீழ்ச்சி உட்பட விடயங்கள் சம்பந்தமாக அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்படலாம் என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை தவிர கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய போது, மேற்கொண்ட செயற்பாடுகள் சம்பந்தமாக தொடரப்பட்டிருந்த குற்றவியல் மற்றும் நிதி குற்றங்கள் தொடர்பான வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor