மகளிர் டி20 உலககோப்பை முதல் முறையாக வென்றது நியூசிலாந்து.. வரலாற்று சாதனையை கொண்டாடும் ரசிகர்கள்.!
மகளிர் டி20 உலக கோப்பையை முதல்முறையாக நியூசிலாந்து அணி கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. துபாயில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை நியூசிலாந்து அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை சுஸி பேட்ஸ் 32 ரன்களும் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை அமீலா கெர் 43 ரன்களும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சோபி டிவைவன் ஆறு ரன்களில் வெளியேற இறுதியில் புரூக் ஹாலிடே 28 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார்.
இதேபோன்று மேடீ கிரீன் 6 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான லாரா ஐந்து பவுண்டர்கள் விரட்டி 27 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார்.
அவருக்கு தாஸ்மின் பிரிக்ஸ் 17 ரன்கள் எடுத்து துணை இருந்தார். இதனால் முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்கா மகளிர் அணி வெற்றியை பெறப்போகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்க ஜோடி ஆட்டம் இழந்தவுடன் அதன் பிறகு களம் இறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். போஸ்ச் ஒன்பது ரன்களிலும், மர்சியானே கேப் எட்டு ரன்களிலும், சுனே லஸ் 8 ரன்களிலும், டெரிக்ஸன் 10 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சு தரப்பில் ரோஸ்மேரி நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை ஆன அமீலா கெர் நான்கு ஓவர்கள் வீசி 24 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் காரணமாக நியூசிலாந்து அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்றிருக்கிறது.ஒட்டுமொட்டு சர்வதேச கிரிக்கெட்டிலும் ஆடவர் நியூசிலாந்து அணி இதுவரை ஒரு முறை கூட ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்றியது கிடையாது.
ஆனால் மகளிர் அணி தற்போது அந்த குறையை நிவர்த்தி செய்து இருக்கிறது. நியூசிலாந்து அணியின் இந்த வெற்றியை ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி வெளியேறியதற்கு நியூசிலாந்து தான் முக்கிய காரணம் ஆகும். முதல் போட்டியிலே இந்திய மகளிர் அணி நியூசிலாந்திடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த டி20 உலககோப்பைக்கு முன்பு தொடர்ந்து 10 டி20 போட்டிகளில் தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணி தற்போது டி20 மகளிர் உலககோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள்