ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்க வியாழேந்திரன் தீர்மானம்!

பொதுத் தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக முற்போக்கு தமிழர் கழகமானது, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கிழக்கு மாகாணத்தில் வலிமையான ஒரு அரசியல் கட்டமைப்பினால்தான் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கமுடியும் என்ற அடிப்படை தத்துவத்துடனேயே 2018ஆம் ஆண்டு முற்போக்கு தமிழர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றுவரையில் அந்த நோக்கத்தினை கருத்தில்கொண்டே செயற்பட்டுவருகின்றோம்.

தேவையற்ற விமர்சனங்களை புறந்தள்ளி ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு செயற்பட்டுவந்ததன் காரணமாக இரண்டு தேர்தல்களில் நாங்கள் வெற்றிபெற்றுள்ளோம்.

அந்தவகையில் நாங்கள் எதிர்கொண்ட மூன்றாவது தேர்தல் இந்த நாடாளுமன்ற தேர்தலாகும் . இத் தேர்தலில் நாங்கள் களம் காணயிருந்தோம்.துரதிர்ஸ்டவசமாக எங்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இலங்கையில் 70க்கும் அதிகமான கட்சிகள்,சுயேட்சைக்குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.அதில் ஒன்றாக நாங்கள் போட்டியிடயிருந்த ஜனநாயக தேசிய கூட்டணியினுடைய வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலிலும் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வாயப்புகள் இருந்தது.காரணம் எங்களது பலமான கட்டமைப்பு.அந்த கட்டமைப்பில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணிக்கின்ற கழக உடன்பிறப்புகள்.சிறு விடயம் கவனத்தில்கொள்ளாததால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆளும் பெரும்பான்மை கட்சியில் எட்டு தமிழர்களை மட்டக்களப்பில் களமிறக்கியவர்கள் நாங்கள்.அதில் நாங்கள் வெற்றியும் கண்டோம்.பெரும்பான்மை கட்சிகளில் குறிப்பாக மூவினங்களையும் சார்ந்தவர்கள் இணைந்துசெயற்படுவார்கள்.

கடந்த காலத்தில் எம்மவர்கள் சேர்க்கும் வாக்கில் எம்மவர்கள் வெற்றிபெறுவதில்லை. ஏனைய சமூகங்களை சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றுவிடுவார்கள்.அதுவே மட்டக்களப்பின் வரலாறு.அந்த வரலாற்றினை முதன்முறையாக உடைத்தவர்கள் நாங்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெற்றிபெற்று அதிலிருந்து வெளியேறி வேறு கட்சியில் கேட்டு வெற்றிபெற்றதாக எந்த சரித்திரமும் இல்லை.ஆனால் வீட்டுச்சின்னத்திலிருந்து வெளியேறி வெற்றிபெற்ற முதலாவது நபர் நான்தான்.

அதுவொரு வரலாற்று பதிவு.வீட்டுச்சின்னம் இல்லாமல் அரசகட்சியில் கடந்த காலத்தில் போட்டியிட்டு போட்டியிட்டு தோல்வி கண்டவர்களே வீட்டில் கேட்டு வெற்றிபெற்றார்கள்.

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்களில் நாங்கள் களமிறங்குவோம்.இடைப்பட்ட காலத்தில் நாங்கள் இல்லாத இடைவெளியும் உணரப்படும்.

தமிழ் சமூகத்திற்கு தேவையான நீதியான தரப்படவேண்டிய விடயங்களைப்பற்றியே நாங்கள் பேசுவோம். இனவிகிதாசாரப்படி நான்கு தமிழ் பிரதிநிதிகள் மட்டக்கள்பபில் தெரிவுசெய்யப்படவேண்டும்.அந்த அடிப்படையில் ஒரு தமிழ் கட்சிக்கு ஆதரவினை வழங்கலாம் என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளோம்.கழக உறுப்பினர்களின் அனைவரது கருத்தினையும் எடுத்து ஒரு தீர்மானத்தினை எடுத்திருக்கின்றோம்.

இந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் முற்போக்கு தமிழர் கழகமானது முழுமையாக எங்களது ஆதரவினை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

நாங்கள் ஒரு தனிப்பட்ட நபருக்கு எங்களது ஆதரவினை வழங்கவில்லை.சங்கு சின்னத்தில் அவர்கள் களமிறங்கியுள்ளார்கள்.

அவர்களுக்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம்.தமிழ் பிரதிநிதித்துவத்தினை பாதுகாப்பதற்காக தயவுசெய்து முழுமையான ஆதரவினை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” இவ்வாறு வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin