இலங்கை சரியான பாதையில் செல்கிறது: இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சங்

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானது இருந்தாலும் இலங்கை சரியான பாதையில் செல்கிறது என இலங்கைக்கான கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சங் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் பொருளாதார மற்றும் அரசாங்க சீர்திருத்தங்களின் முக்கிய தேவைகளையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

மேலும் பொருளாதார சீர்திருத்தங்கள் சவால் நிறைந்ததாக இருந்தாலும் இலங்கை சரியான பாதையில் செல்கிறது என வலியுறுத்தினார்.

இந்த சீர்திருத்த செயல்முறைகள் முன்னேறும்போது, இலங்கை மக்கள் அவர்களது தலைவர்களிடமிருந்து வெளிப்படைதன்மை, பொறுப்புக் கூறல் போன்றவற்றுக்கு தகுதியானவர்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் மாற்றத்துக்கான அழைப்பை பிரதிபலிக்கிறது.

இவற்றை உணர வேண்டிய பொறுப்பில் அரசாங்கம், வணிகத் துறை, கல்வித்துறை, பத்திரிகை, சிவில் சமூகம் உட்பட நாட்டின் தலைவர்களிடம் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

புதிய அரசாங்கம் உருவாகும் நிலையில், வணிகத் தலைவர்களை முக்கிய பங்கை வகிக்குமாறும் வலியுறுத்தியிருந்தார்.

வணிகத் தலைவர்கள் வெறுமனே பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்கள் மட்டுமல்ல. அவர்கள் சமூக சிந்தனையாளர்கள் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

வணிகத் தலைவர்களின் செயலூக்கமான ஈடுபாடு, வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிறந்த நிர்வாக நடைமுறைகளை முன்னெடுக்க உதவும் எனவும் குறிப்பிட்டார்.

அமெரிக்க வர்த்தகங்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த உறவு மேலும் விருத்தியடைய இலங்கை அரசாங்கம் நிலையான ஆட்சி முறையை அமைப்பது இன்றியமையாததாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்களின் அடிப்படையில் அமெரிக்க – இலங்கை வர்த்தக உறவின் எதிர்காலம் குறித்து சங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்வதுடன் அனைவரையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் யூகிக்கக்கூடிய நிர்வாக அமைப்பை உருவாக்குவதன் மூலம் பொருளாதார கூட்டுறவின் முழு ஆற்றலும் திறக்கப்படும்.

இரு நாடுகளுக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்க அமெரிக்க இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளது எனவும் சங் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin