ஐ.பி.எல் தொடரின் ஏலத்தில் வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர், கடைசி நேரத்தில் விலகினால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்து அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளின் வீரர்கள் ஐபிஎல் தொடர் மூலமாக நல்ல வருமானம் பெற்று வந்தனர். மெகா ஏலத்தில் பங்கேற்காமல் மினி ஏலத்தில் பங்கேற்று, மிகப்பெரிய ஊதியத்தை பெற்றனர்.
அதேபோல் குறைந்த தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டால், கடைசி நேரத்தில் காயம் என்று கூறி விலகி வருவதும் தொடர்கதையாகி வந்தது
இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐபிஎல் நிர்வாகக் குழு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.
அதாவது, ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் வெளிநாட்டு வீரர் பெயர் கொடுக்கவில்லை என்றால், அடுத்த 2 ஆண்டுகள் நடக்கும் மினி ஏலத்தில் பங்கேற்க முடியாது.
அதேபோல் ஏலத்தில் ஒரு அணியால் வீரர் வாங்கப்பட்ட பின், கடைசி நேரத்தில் விலகினால், அவர் ஐபிஎல் தொடரில் விளையாட 2 ஆண்டுகள் தடை செய்யப்படும்.
ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த விதிகள் வெளிநாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது. இதுகுறித்து வெளிநாட்டு வீரர்கள் பலரும் இதுவரை கருத்து கூறவில்லை.
இந்த நிலையில் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் பேசுகையில், ஐபிஎல் தொடருக்கான விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்த விதிகள் இதுவரை எனக்கு சிக்கலையும் அளித்ததில்லை. ஏனென்றால் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட பின், ஒருமுறை கூட விலகியதில்லை.
ஆனால் இனி வரும் காலங்களில் ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் சில விஷயங்களை கணக்கில் கொண்டே முடிவு எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்னுரிமை அளிப்பேன். அதேபோல் உலகக் கிண்ணத் தொடர்களும் அடுத்தடுத்து வருகின்றன.
அதனால் எது தேவையோ, அதற்கேற்ப முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா அணியின் தலைவராக இன்னும் சில ஆண்டுகள் தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சில அற்புதமான வீரர்களுடன் பயணிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் இளம் வீரர்கள் அவுஸ்திரேலியா அணிக்குள் வர தொடங்கிவிடுவார்கள்.
அதற்காக நானும் விரைவில் ஓய்வு பெறுகிறேன் என்று எண்ண வேண்டாம். 2027ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இலக்காக வைத்து பயணித்து வருகிறோம்.
அதற்குள் தலைமையில் இருந்து விலகவும் வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனில் ஐதராபாத் அணியின் தலைவனாக களமிறங்கிய பேட் கம்மின்ஸ், அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார்.
இதனால் ஐதராபாத் அணியின் நிரந்தர வீரர்களில் ஒருவராக கம்மின்ஸ் தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஐசிசி தொடர்கள் நெருங்கும் போது, ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்று கம்மின்ஸ் கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அவுஸ்திரேலியா வீரர்கள் பலரும் ஐபிஎல்லில் விளையாடுவதற்கு முன்னுரிமை அளிப்பதும் குறிப்பிடத்தக்கது.