நாய் கடிக்கு இலக்கான இரண்டரை வயது ஆண் குழந்தைக்கு, அதி வீரியமான பாரதூரமான (ஓவர்டோஸ்) ஊசி மருந்தை மருத்துவர் பரிந்துரைத்த நிலையில், தாதிய உத்தியோகத்தர் அதைக் கவனித்தமையால் பின்னர் சரியான ஊசி ஏற்றப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
இரண்டரை வயதுக் குழந்தையொன்றின் கையில், அயல்வீட்டு நாய் கடித்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் குழந்தையை கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கடமையிலிருந்த பெண் மருத்துவர் குழந்தைக்கு ஊசி மருந்து ஏற்றுவதற்கு சிட்டையில் எழுதியுள்ளார். பின்னர் ஊசியை ஏற்றும் தாதிய உத்தியோகத்தரிடம் கொண்டு சென்றுள்ளனர்.
அதனைப் பார்வையிட்ட தாதிய உத்தியோகத்தர், சிட்டையில் எழுதப்பட்டுள்ள மருந்து பாரதூரமானது என்றும் அதனைப் பயன்படுத்துவது குழந்தையின் உயிருக்கே ஆபத்தானது என்றும், மீண்டும் ஒரு தடவை மருத்துவரிடம் சென்று காட்டுமாறு கூறியுள்ளார். அதேநேரம், கையில் கடித்தமை என்று தெரிவித்த போதும் மருத்துவர் காலில் கடித்ததாகவும் எழுதியுள்ளார்.
இந்தத் தவறுகளை மருத்துவரிடம் பெற்றோர் சுட்டிக்காட்டியதையடுத்து அவர் அதே சிட்டையில் முன்னர் எழுதிய ஊசி மருந்தை வெட்டி சரியான ஊசி மருந்தை பின்னர் எழுதியுள்ளார்.
வடக்கு சுகாதாரத்துறையில் ஏற்கனவே மருத்துவக் கவனயீனங்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டு வரும் நிலையிலேயே இந்தச் சம்ப வம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.