“என்னைப் பின்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் வருவது எனக்கு எப்படியும் பிடிக்காது. “சலுகைகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் கவலையில்லை..” – சந்திரிக்கா, மைத்திரிபால
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர், முன்னாள் ஜனாதிபதிகள் என்ற ரீதியில் தமக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை ரத்து செய்தமை அல்லது குறைக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு வருத்தம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி தமது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள், வாகனங்கள், கொடுப்பனவுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற சலுகைகளை குறைப்பது உட்பட பல வாக்குறுதிகளை வழங்கியது.
இந்த விடயம் தொடர்பில் வினவிய போது;
ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் தாம் அதிக சலுகைகளை அனுபவிக்கவில்லை என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் எனக்கு அரசாங்கத்தினால் ஓய்வூதியம் கூட வழங்கப்படவில்லை. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது எனக்கு ஒன்பது வருடங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அதனால் 94,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கினர். அதைப் பெறுவதற்கும், தொண்டுப் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கு நான் ஒரு தனி வங்கிக் கணக்கைத் இலங்கை வங்கியில் திறந்தேன்..”
“எனது ஊழியர்களுக்கு சம்பளம், தண்ணீர் மற்றும் மின்சார கட்டணம் செலுத்துவது நான்தான். எனது நிலத்தை விற்று சம்பாதித்த லட்சக்கணக்கில் உத்தியோகபூர்வ இல்லத்தை புனரமைப்பதற்காக நான் செலவளித்தேன். மேலதிகமாக எனக்கு நான்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன, அதில் இரண்டு வாகனங்கள் என் உபயோகத்திற்கு மற்ற இரண்டும் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத்தான். சந்திரிகா குமாரதுங்க கூறியதுடன், 2020 ஆம் ஆண்டில், அப்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏழு வாகனங்களைத் திருப்பிக் கொடுத்தேன்..”
இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, முன்னாள் ஜனாதிபதி என்ற முறையில் தனக்கு வழங்கப்பட்ட எந்த சலுகையையும் அரசாங்கம் குறைத்தாலும் அது பற்றி நான் அலட்டிக் கொள்ளவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
“என்னைப் பின்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் வருவது எனக்கு எப்படியும் பிடிக்காது. வரவில்லை என்றால் அவர்களுக்குப் பிரச்சினை என்று அவர்கள்தான் கூறுகிறார்கள். எனக்கு தீங்கு விளைவிக்க யாரும் இல்லை என்று நான் நம்புகிறேன். நான் யாருக்கும் எந்த தவறும் செய்யவில்லை, பாதுகாப்பு மற்றும் பிற சலுகைகள் குறைக்கப்படுவதை நான் பொருட்படுத்தவில்லை..”