ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட 300 பார் பெர்மிட்களை உடனடியாக இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை!
செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் முன்னாள் எம்.பிக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்ட 300 பார் பெர்மிட்களை உடனடியாக இரத்துச் செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
முறையற்ற விதத்தில் பார் பெர்மிட்களைப் பெற்ற முன்னாள் எம்.பிக்கள் உள்ளிட்ட நபர்களின் பெயர் விபரங்களையும் தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
கடந்த காலங்களில் இந்த மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம் பூதாகரமாக இருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எக்கச்சக்கமான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள எம்.பிக்கள் பலர் இதனைப் பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்தன.
மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்ற அரசியல்வாதிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக நேரடியாக எந்த ஆவணங்களிலும் கையொப்பமிடவில்லை.
மதுபானசாலை உரிமையாளர்களிடம் பணத்தைப் பெற்று புரிந்துணர்வு அடிப்படையில் அவற்றை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. இப்போது அரசாங்கம் இந்த உரிமங்களை இரத்துச் செய்தால் மதுபானசாலை உரிமையாளர்களிடம் வாங்கிய பணத்துக்காக அரசியல்வாதிகள் நெருக்கடியைச் சந்திக்க வேண்டி வரும்.
இந்த இடைவெளிக்குள் கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள பார் (மதுபானசாலை) பெர்மிட்டுகளில் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் கோட்டாவில் வழங்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரடிப்போக்குச் சந்தியில் ஏ 9 வைன் ஸ்ரோர் எனும் பெயரில் இயங்கும் மதுபானசாலைக்கான அனுமதி வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடாகப் பெற்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சி.வி.விக்னேஸ்வரன் 2024.02.19 அன்று எழுத்து மூலம் வழங்கிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த மதுபான சாலைக்கான அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினூடாக வழங்கப்பட்டுள்ளது.
“இவ்வாறு உங்கள் பெயரில் இந்த மதுபானசாலை வழங்கப்பட்டுள்ளதே!” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரனை செய்தியாளர் ஒருவர் தொடர்புகொண்டு கேட்டபோது, “அந்த மதுபானசாலை அனுமதியை தாய், தந்தையற்ற ஒரு பெண்மணிக்கே பெற்றுக்கொடுத்தேனேயன்றி நான் எடுக்கவில்லை” என்று பதிலளித்திருக்கிறார்.
தமிழ்த் தேசியம் பேசி சிங்களத் தலைமைகளைத் திட்டித்தீர்த்து அரசியல் செய்த பலர், அதே சிங்களத் தலைவர்களிடம் பணத்துக்காகவும் பந்தாவுக்குமாக சோரம் போயிருப்பது கவலைக்குரிய விடயம்.
அதுவும் விக்கினேஸ்வரன் போன்ற தனது வாழ்நாளில் சிங்கள அரசியல், நிர்வாக ஆளுகைக்கு கட்டுப்பட்ட ஒருவர் தனது ஓய்வுகாலத்தில் அரசிடம் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு தமிழர்களை காப்பார் என்று நினைத்து அவரை அரசியலுக்கு கொண்டுவந்ததே தமிழர் அரசியலின் முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகிறது.
‘ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல தமிழ் அரசியல்வாதிகளின் இரட்டைப்போக்கு செயற்பாட்டை பார் லைசன்ஸ் விடயத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறார் விக்னேஸ்வரன்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் 172 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு அவை திறக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுர இப்போது எடுத்திருக்கும் தீர்மானம் உடனடியாக அமுலுக்கு வரவேண்டும்.
அந்த அனுமதிப்பத்திரங்களின் உரிமங்களை இரத்துச்செய்வது போலி முகத்தைக் காட்டும் பல அரசியல்வாதிகளின் முகத்தை அம்பலப்படுத்தும். அதுமட்டுமல்ல, அரசு மீதான மேம்பட்ட நல்லெண்ணத்தையும் அது கொண்டுவரும் என்பதைச்
சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.