பொதுத் தேர்தல்: முக்கிய இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி?

பொதுத் தேர்தலில் கூட்டணியாகக் களமிறங்குவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடையும் நிலைமையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த இரண்டு பிரதான நிபந்தனைகளே இதற்கு காரணம் என்று உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு நிபந்தனைகளினால் கூட்டணிப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் சுமார் 8 கலந்துரையாடல்கள் இதுவரை இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பிரதான நிபந்தனைகள் காரணமாக, இந்த கலந்துரையாடல்களை முன்கொண்டு செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைப்பேசி சின்னத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, புதிய கூட்டணியில் இருக்கக் கூடாது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஆனால், ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்க பெற்ற பெரும்பான்மையான வாக்குகள் அவரது தனிப்பட்ட வாக்குகளாகக் கருதப்படுவதால் அவர் இல்லாத அரசியல் கூட்டணிக்கு உடன்பட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின்போது தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், புதிய கூட்டணியின் தலைமைப் பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி நிபந்தனையொன்றை விதித்துள்ள நிலையில், இதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான சூழல்களினால், இரு தரப்புக்கும் இடையிலான கூட்டணி பேச்சுக்களை தொடர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே கட்சித் தலைவராக நீடிக்க வேண்டும் என நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நெலுவ தொகுதிக் குழுவில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin