சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச , கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரபால சிறசேன ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாச ஆகியோரை பராமரிப்பதற்காக மூன்று வருடங்களில் (2022-2024) சுமார் 27 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் மத்திய வங்கி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள வாரஇறுதி சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர்களை பராமரிக்க கடந்த 2022ஆம் ஆண்டில் 7 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் அது 8 கோடி ரூபாயாகவும் இவ்வாண்டில் 11 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முதல் பெண்மனிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 45 வீத அதிகரிப்பு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்காக இவ்வாண்டில் 1 கோடியே 56 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாயை ஒதுக்கியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்காக 2 கோடியே 91 இலட்ச 70 ஆயிரம் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கும் பேராசிரியர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவுக்காக இவ்வாண்டில் 68 இலட்ச 20 ஆயிரம் ரூபாயை ஒதுக்கியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 273 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 54 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒதுக்கிய தொகையில் 329 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் பேராசிரியர் வச்நத அத்துகோரள தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்காக இம்முறை வரவு செலவு திட்டத்தில் 660 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் அது 273 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆக, ஜனாதிபதிகளுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் தொகையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டினார்.