சுங்கத் திணைக்களத்தினால் ஒத்திகை நேர்முகத்தேர்வு

மோசடியான முறையில் உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒத்திகை நேர்முகத்தேர்வு ஒன்றை நடத்தவுள்ளதாக சிலர் அறிவித்தல் விடுத்துள்ளமை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான மோசடிகளில் சிலர் ஈடுபட்டுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுங்கத் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை சுங்கத்தில் புதிய உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றது.

அந்த போட்டித் தேர்வு முடிவுகளின்படி ஒரு குழு நேர்காணலுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நேர்காணல் இம்மாதம் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

குறித்த நேர்காணலில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படும்.

கல்வித் தகுதியை சரிபார்க்கவும், உடல் தகுதியை சரிபார்க்கவும் மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

இது தவிர எந்த ஒரு விடயத்திற்கும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை. நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒத்திகைச் செயலமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை

இதற்கிடையில், சுங்க அதிகாரிகள் ஆட்சேர்ப்புக்கான நேர்காணலுக்குத் தயாராகும் வகையில், சிலர் ஒத்திகைச் செயலமர்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதை சமூக வலைதளங்களில் சமீபத்தில் பார்த்தோம்.

இது ஒரு பணம் பறிக்கும் கும்பலாக இருக்கும் என்பது தெளிவான விடயம். அவ்வாறான மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றோம்” என்றும் சுங்கத் திணைக்களத்தின் மேலதிகப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin