வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்கள் மீள் குடியேறும் வகையில், காசா மீதான போரின் இலக்குகளை இஸ்ரேல் செவ்வாயன்று விரிவுபடுத்தியுள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவையின் இரவு நேரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவின் தாக்குதல்களால் வடக்கு இஸ்ரேலில் உள்ள பெருமளவான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸின் தாக்குதல் காசாவில் போரைத் தூண்டியது. ஒரு நாள் கழித்து இஸ்ரேலுக்கு எதிராக ஹெஸ்பொல்லாவும் போர் தொடுத்தது.
இதனையடுத்து இஸ்ரேல்-லெபனான் எல்லையில் மோதல் அதிகரித்து, பிராந்தியத்தில் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது.
போர் பதற்றம் காரணமாக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் வடக்கு எல்லையில் உள்ள நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர், ஏவுகணை தாக்குதலால் அந்தப் பகுதிகள் மோசமாக சேதமடைந்துள்ளனர்.
இதனால் அங்கிருந்து வெளியேறியவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பவில்லை.
இந்நிலையில், “ஹமாஸுடன் ஹெஸ்பொல்லா தொடர்ந்து ‘தன்னை இணைத்துக் கொண்டு’ மோதலை முடிவுக்குக் கொண்டுவர மறுப்பதால் சமாதானத்திற்கான சாத்தியம் முடிந்துவிட்டது” என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
எனவே, இஸ்ரேலின் வடக்குச் சமூகங்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதை உறுதி செய்வதற்கான ஒரே வழி இராணுவ நடவடிக்கையே ஆகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.