ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது நினைவு தினம், இன்றைய தினம் யாழ்ப்பாணம் வேலணை வங்களாவடி சந்தியிலுள்ள நினைவுத்தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்கள், போராளிகளின் பெற்றோர், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், யாழ். மாநகர சபையின் பதில் முதல்வர் துரைராசா ஈசன், தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சு. நிஷாந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, தியாக தீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.