ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பும் தேர்தல்கள் ஆணைக்குழு

பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் நலன்புரி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எட்டும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதேவேளை, பொலிஸ்மா அதிபர் ஒருவர் இல்லாத நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தடைகள் ஏற்படுமா என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இதுதொடர்பில் ஊடக சட்ட மன்றத்தின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி பிரபோத ரத்னாயக்கவிடம் “ஒருவன்“ செய்தி பிரிவு வினவியது, தேர்தல் சட்டத்தில் பொலிஸ்மா அதிபர்களின் பதவி நீக்கம் தாக்கம் செலுத்தாது என அவர் பதிலளித்தார்.

ஆனாலும் அரசியலமைப்பு சபைக்கு பொலிஸ்மா அதிபர் ஒருவரின் பெயரை ஜனாதிபதி பிரேரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபரின் ஊடாகவேனும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.

இதேவேளை இன்றைய கூட்டத்தின் போது அரசாங்கத்தால் அபிவிருத்தி மற்றும் நலன்புரி வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அஸ்வெசும, காணி உறுதிப்பத்திரம் வழங்கல், ஜனாதிபதி புலமைப்பரிசில் மற்றும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அரச சொத்துக்களைப் பயன்படுத்துகின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin