எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார்? என்பதை தீர்மானிக்க கட்சியின் அரசியல் சபை இன்று (29ஆம் திகதி) கூடுகின்றது.
கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச தலைமையில் நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களை பரிசீலித்து அரசியல் சபை இறுதித் தீர்மானம் எடுக்கும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தக்கூடிய, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய, இளைஞர்கள் எதிர்பார்க்கும் ஒரு வேட்பாளரை முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்காக ஐக்கிய மக்கள் சக்தியினால் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணி தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கும், சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
சஜித்தின் வெற்றிக்காக உருவாக்கப்படும் அரசியல் கூட்டமைப்பை எதிர்வரும் எட்டாம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இந்த வாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியடையும் எனவும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.