கடந்த காலங்களில், தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் விஞ்ஞானபூர்வ அடிப்படையில் அல்லாது, இனவாதம், மதவாதம், இன பேதம் மற்றும் மத பேதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு இனத்தை ஓரங்கட்டுவதும், ஒரு மதத்தை நசுக்குவதும்தான் அரசின் கொள்கையாக அமைந்து காணப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
”இன்று அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்கின்றனர். மன்னிப்பு கேட்பது நல்ல விடயம் தான். என்றாலும், வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு, அதனால் சிரமத்திற்கு உள்ளான குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இந்த இழப்பீட்டைப் பெற்றுத் தருவேன்.
பாலஸ்தீன மக்கள் மிகவும் ஆபத்தான நிலையை சந்தித்துள்ளனர். குறிப்பாக சர்வதேச வரலாற்றில் இடம்பெற்ற விடயங்களை சிறுவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல யுத்தங்கள் நடந்தன. 1948, 1956 சுவாஸ் கால்வாய் காரணமாக ஏற்பட்ட யுத்தம், 1967 யுத்தம், 1973 யுத்தம் மற்றும் 1978 முதல் பாலஸ்தீன மக்கள் மீதான தொடர்ச்சியான பயங்கர யுத்தம் என பல யுத்தங்கள் நடந்தன, நடந்து கொண்டிருக்கின்றன.
இரு நாடுகளும் இணக்கப்பாட்டோடு இணைந்து செயல்படுவதே உலகின் பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொள்ளும் தீர்வாகும். ஐக்கிய நாடுகள் சபையின் 2 தீர்மானங்கள் மூலம் பாலஸ்தீன், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் அமைதி, ஒற்றுமை மற்றும் நட்புறவுடன் செயல்பட வேண்டும் என்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. கேம்ப் டேவிட், ஒஸ்லோ தீர்மானம் போன்ற பல தீர்மானங்கள் இந்தப் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நிறைவேற்றப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சகல சந்தர்ப்பங்களிலும் சமாதானத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். அன்வர் சதாத், இஸ்ரேலின் பிரதமராக இருந்த ஒருவர் கூட அமைதிக்கு உடன்பட்டதற்காக கொல்லப்பட்டார். எனவே, பிள்ளைகளும் மாணவர்களும் கூட இந்த வரலாற்றை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஸ்மார்ட் தலைமுறை முடிவெடுக்கும் போது, தீர்மானங்களுக்கு வரும்போது, சரியான தகவல், தரவு மற்றும் சான்றுகளின் அடிப்படையில் முறையாகவும் அறிவியல் பூர்வமாகவும் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.