ரஷ்ய பணத்தில் உக்ரெய்னுக்கு உதவி

நேட்டோவில் உக்ரெய்ன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரெய்ன் மீது படையெடுத்தது.

தொடர்ந்தும் இத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், உக்ரெய்னுக்கு அதிகளவான உயிர்ச்சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் முடக்கப்பட்ட ரஷ்யாவின் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் இலபத்தைக் கொண்டு உக்ரெய்னுக்கு முதல் முறையாக 160கோடி டொலரை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொண்டெர் லெயென் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

‘ஐரோப்பிய யூனியன் எப்பொழுதும் உக்ரெய்னுக்கு ஆதரவாக இருக்கும். இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து கிடைக்கப்பெற்ற பணத்தை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளோம்.

ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பைப் பெறவும் சேதங்களை மறுசீரமைக்கவும் இந்தத் தொகை அனுப்பப்பட்டுள்ளது. உக்ரெய்னையும் ஐரோப்பாவையும் ரஷ்யாவிடமிருந்து பாதுகாக்க அந் நாட்டு பணத்தையே பயன்படுத்துவதுதான் சிறந்த வழி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரெய்ன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் எனக் கூறிவரும் உலக நாடுகள், உக்ரெய்னுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி போன்றவற்றை செய்து வருகின்றன.

ஆனால், சில உள்ளூர் பொருளாதார நிலைமைகளினால் அந்த நிதியை அளிப்பதில் சிரமம் ஏற்படவே, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களின் வருவாயை உக்ரெய்னுக்கு வழங்கும்படி ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூறி வந்தனர்.

இந்த செயல்பாட்டுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, இந்த செயல்பாட்டினால் சொத்துக்களை பாதுகாப்பாக முதலீடு செய்ய ஏற்ற இடம் என்ற பெயரை ஐரோப்பிய நாடுகள் இழந்துவிடும். இது அந்த நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் எனவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin