மக்களுக்கு தேர்தலை பெற்றுக்கொடுத்து அதில் வழங்கும் ஆணைக்கு இடமளியுங்கள். ஜனநாயகத்துக்கு மாத்திரமே இலங்கையில் இடமுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச,
”தேர்தல்கள் நடைபெற வேண்டிய காலகட்டம் தொடர்பில் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலையில் அரசாங்கம் ஏன் பலவேறு யோசனைகளை கொண்டுவருகிறது.
அதற்கு பிரதான காரணம் அரசியலமைப்பை விளையாட்டுத் தனமாக எடுத்துக்கொண்டுள்ளனர். இதுவொரு ஜனநாயக நாடு. மக்களின் இறையாண்மையை கொண்ட நாடு. சட்டவாக்கம், நீதித்துறை, நிறைவேற்றுத்துறைக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு எமது நாட்டில் ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
சமகால அரசாங்கமும் ஜனாதிபதியும் அரசியலமைப்பு சூழ்ச்சியொன்றை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக மக்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்காகதான் இவ்வாறான யோசனையொன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்களின் இறைமை, உரிமை, ஜனநாயகத்தை பேசும் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி திரிவுபடுத்தப்பட்ட வழியில் அதிகாரத்தில் இருக்க முயற்சிக்கிறார். இதுவொரு வெட்கக்கேடான விடயம்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைக்க நீதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள இவர்கள் மேற்கொண்ட நாடகங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதிலும் அவ்வாறான சிக்கல்களை ஏற்படுத்த இவர்கள் முற்படுவார்கள் என்ற சந்தேகம் உள்ளது.
மக்களுக்கு தேர்தலை பெற்றுக்கொடுத்து அதில் வழங்கும் ஆணைக்கு இடமளியுங்கள். இந்த நாட்டில் ஹிட்லர்களுக்கும் முசோலினிகளுக்கும் இடமில்லை. ஜனநாயகத்து மாத்திரமே இந்த நாட்டில் இடமுள்ளது.
அரசாங்கம் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் வாக்குரிமையை பெற்றுக்கொடுக்கும்.” என்றார்.