இலங்கை நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமப்பிக்க வேண்டும்.
இம்முறை 169 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துகள், பொறுப்புகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியிருந்த நிலையில், 69 உறுப்பினர்கள் மாத்திரமே இதுவரை சமர்ப்பித்துள்ளதாகவும் 100 உறுப்பினர்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இவ்வாறு தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சமர்ப்பிக்காதவர்களில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உட்பட அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவானவர்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள், பொறுப்புகளை உரிய முறையில் சமர்ப்பிப்பதில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கும் சபாநாயகருக்கும் உள்ள போதிலும், அந்தப் பணிகள் உரிய முறையில் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சம்பளம், கொடுப்பனவுகள் அடங்களாக 3 முதல் 5 இலட்சம் வரை கிடைக்கப்பெறுகிறது. ஆனால், சாதாரண உறுப்பினராக தெரிவாகும் ஒருவர் ஐந்து வருடங்களில் பல கோடிகளுக்கும், சொத்துக்களுக்கும் அதிபதியாகிவிடுகிறார்.
இவற்றுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் எவ்வித சட்டங்களும் ஆளும் அரசாங்கங்களால் இயற்றப்படுவதில்லை. மாறாக மேலும் சம்பளத்தையும், கொடுப்பனவுகளையும் அதிகரிப்பதற்கே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளட்டன. என்றாலும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு இணங்கவில்லை என்பதால் அந்தச் செயல்பாடு கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.