ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டமையை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திவந்த மேல் நீதிமன்றம், சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு நேற்று வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்தது.
இதன் காரணமாக சு.கவின் பொதுச் செயலாளராக பணியாற்றும் அதிகாரம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளதுடன், இன்று வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்கவும் சென்றிருந்தார்.
என்றாலும், பொலிஸார் இவரை கட்சியின் அலுவலகத்துக்குள் உள்நுழைய விடாது தடுத்தனர். இதனால் கட்சியின் அலுவலகத்துக்கு முன்பாக தயாசிறி ஜயசேகர பதவியேற்றிருந்தார்.
இந்த நிலையில் தயாசிறி ஜயசேகரவுக்கு முன்னாள் ஜனாதிபதியும் சு.கவின் முன்னாள் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, வாழ்த்துத் தெரிவித்துள்ளடன், ஒன்றாக பயணிப்பதற்கான அழைப்பையும் விடுத்துள்ளார்.
தயாசிறி ஜயசேகரவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்தில் ஒன்றிணைந்து செயற்பட முடியும் எனவும் கூறியுள்ளார்.
கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகளை சுமத்தி தயாசிறி ஜயசேகரவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியிருந்த மைத்திரிபால சிறிசேன, தற்போது மீண்டும் அவருடன் கைகோர்த்து செயல்படும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பானது சுயநலம் கொண்டதாகும் என சு.கவின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.