யூரோ கால்பந்து தொடரில் ஸ்லோவேனியா அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி கோல் முறையில் 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்த்துகல் அணி கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
யூரோ 2024 கால்பந்து தொடரின் சுப்பர் 16 சுற்றில் போர்த்துகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறின.
இதனால் பெனால்டி ஷூட்அவுட்டில் 0-3 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் வெற்றிபெற்றுள்ளது.
உலகக் கால்பந்து தரவரிசையில் 57வது இடத்தில் உள்ள அணிக்கு எதிரான கோல் அடிக்க தடுமாறிய போர்த்துகல் பெனால்டி ஷூட்அவுட்டை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இதன்மூலம் எதிர்வரும் ஆறாம் திகதி பலம்வாய்ந்த பிரான்ஸ் அணியை கால் இறுதிச் சுற்றில் போர்த்துகல் சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டி மூலம் கைலியன் எம்பாப்பே மற்றும் ரொனால்டோ நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறியதை அடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டிருந்து. சுமார் 30 நிமிடங்கள் வரையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதிலும் இரு அணிகளும் கோல் அடிக்க தவறியிருந்தன.
போட்டியின் 103வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நட்சத்திர வீரர் ரொனால்டோ தவறவிட்டிருந்தார். அவர் அடித்தப் பந்தை ஸ்லோவேனியா அணியின் கோல் கீப்பர் மிகவும் அற்புதமாக தடுத்திருந்தார்.
இதனால் ரொனால்டோ மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுதார். கூடுதல் நேர பெனால்டி மிஸ் தவிர, ரொனால்டோவின் வயதுக்கு மீறிய பந்தைக் கையாளுதல் மற்றும் ஆற்றல் ஆகியவை போட்டியின் சிறப்பம்சமாக இருந்தன.
போர்த்துகல் அணிய வீரர்களின் சரமாரியான தாக்குதல் ஆட்டத்திற்கு மத்தியில் ஸ்லோவேனியர்கள் எதிர் தாக்குதல்களால் எதிரணியினரை அச்சுறுத்தினர்.
எவ்வாறாயினும், இறுதியில் வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை போர்த்துகல் அணி வீரர்கள் சாதகமாக்கிக்கொண்டனர்.
தனக்கு கிடைத்த மூன்று வாய்ப்புகளையும் போர்த்துகல் வீரர்கள் கோலாக மாற்றிக்கொண்டனர். எனினும், ஸ்லோவேனியா அணி வீரர்களால் எந்தவொரு கோலையும் அடிக்க முடியவில்லை.
பெனால்டி ஷூட்அவுட்டின் போது போர்த்துகல் அணியின் கோல் கீப்பர் டியாகோ கோஸ்டா சிறப்பாக செயற்பட்டு அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தார்.