ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.
தமது கூட்டணியை வலுப்படுத்த தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்டாயமாகியுள்ளது.
வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் இம்முறை பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் பணியாற்றி வருவதால் அக்கட்சிகளுடன் ரணில் இன்னமும் கலந்துரையாடல்களில் ஈடுபடவில்லை.
ஆனால், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் அவர் ரகசிய பேச்சுகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை எதிர்க்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த பிரேரணையை எதிர்க்க முடியாது எனவும் அது தொடர்பில் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்கு எதிராக வாக்களிக்க மாட்டோம் எனவும் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.