ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்புக்கான காலம் நெருங்கிவரும் தேர்தலுக்கு தயாராகுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவால் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர், அரச அச்சகம், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.L.ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களின் குறைபாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பில் புள்ளிவிபர அறிக்கையைத் தயாரிக்குமாறும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு சுற்றுநிரூபத்தின் ஊடாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை,ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தால் அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.