ரணில் – பொதுஜன பெரமுன இடையில் முக்கிய சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று அடுத்தவாரம் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதுதொடர்பில் பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் , ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் பல்வேறு சந்திப்புகள் கடந்த காலத்தில் இடம்பெற்ற போதிலும், எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படாமலேயே அந்த சந்திப்புகள் முடிவுற்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என பசில் ராஜபக்ச, இந்த சந்திப்புகளில் கோரிக்கையாக முன்வைத்த போதிலும், அதற்கு ரணில் விக்ரமசிங்க இணங்கவில்லை.

இந்த நிலையில் தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கயுள்ளதாலும் இரண்டுக் கட்சிகளும் ஆளுங்கட்சியாக இருப்பதாலும் கட்டாயம் கூட்டணியொன்றை அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அடுத்தவாரம் ஜனாதிபதியுடன் நடைபெற உள்ள இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உட்பட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரியவருகிறது.

என்றாலும், பொதுஜன பெரமுனவில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஒரு குழுவும், நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவாக ஒரு குழுவும் உருவாகியுள்ளது. இவர்களை சமரசப்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என அறிய முடிகிறது.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவருவதால் கொழும்பில் அரசியல் கூட்டணி பேச்சுகளும் பேரம் பேசுதலுதம் சூடுபிடித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சில பங்காளிக் கட்சிகளை தமது பக்கம் இழுக்கும் நகர்வுகளிலும் ரணில் ஈடுபட்டுள்ளார்.

அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை் சிலரையும் ஆளுங்கட்சியில் இணைக்கும் முயற்சிகளையும் ரணில் மேற்கொண்டுவருகிறார். எதிர்வரும் வாரங்களில் பல அதிரடி அரசியல் நிகழ்வுகள் கொழும்பு அரசியலில் இடம்பெறும் என்றே அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin