29ஆம் திகதி ரணில், அனுர, மஹிந்த, சஜித் மக்கள் மேடைகளில்

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அடுத்த 24 மணித்தியாலங்களில் பொதுத் தேர்தலை நடத்துவோம் என ஏறக்குறைய எதிர்க்கட்சிகளின் அனைத்து முக்கிய வேட்பாளர்களும் கூறியுள்ளனர்.

அதன்படி இன்னும் 100 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி ஒருவர் நாட்டில் தெரிவுசெய்யப்பட்டிருப்பார் என்பதுடன், நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்புகளும் வெளியாகும்.

ஆனால், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றால் அரசியல் சூழ்நிலைகள் மாறலாம் என்பதுடன், தேசிய அரசாங்கமொன்று அமைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பொதுத் தேர்தலொன்று நடைபெற்றால் தற்போதைய எம்.பி.க்களில் பெரும்பாலானோர் பதவியை இழக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு சூழலில் தற்போது எம்.பி.க்கள் பலர் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு கூட்டணிகளுடன் கலந்துரையாடி வருகின்றனர்.

குறிப்பாக பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேச்சையாக உள்ள பெருமளவிலான உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ரணில் தரப்புடனும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

பல பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும் மேலும் பல பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் கட்சிகளின் வட்டாரங்களில் அறிய முடிந்தது.

இந்த நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன பிரமாண்ட பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

ரணில் விக்ரமசிங்கவின் பொதுக் கூட்டம் வெல்லவாயவிலும், அனுரகுமாரவின் கூட்டம் களுத்துறையிலும், மஹிந்தவின் கூட்டம் அகலவத்தையிலும் இடம்பெற உள்ளன. இதனால் எதிர்வரும் 29ஆம் திகதி பல்வேறு அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிடும் நாளாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin