நடப்பு T20 உலகக் கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றின் இறுதி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி எட்டு ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இதன்மூலம் T20 உலகக் கிண்ண தொடரில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
மேலும், பெரும் எதிர்ப்பார்பில் இருந்த முன்னாள் சாம்பியனான அவுஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியுள்ளது.
செயின்ட் வின்சென்ட்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 115 மட்டுமே பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், 116 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 105 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் ஆப்கான் அணியினர் பங்களாதேஷை வீழ்த்தியிருந்தனர்.
இந்தப் போட்டி பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது.
ஒருவேளை இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்திருந்தால் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த அவுஸ்திரேலியா நிகர ஓட்டங்களின் அடிப்படையில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருக்கும்.
அதேபோல் 12.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்திருந்தால் பங்களாதேஷ் அணி அரையிறுப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருக்கும்.
ஆனால் மிகவும் பரபரப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் இறுதி நேரத்தில் தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் ஆப்கானிஸ்தான் பெற்றிபெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அணித் தலைவர் ரஷித்கான் மற்றம் நவீன் உல் ஹக் தலா ஆகியோர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
பங்களாதேஷ் அணி சார்பில் லின்டன் தாஸ் தனி ஒருவராக போராடியிருந்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவர் ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக நவீன் உல் ஹக் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
இதன்படி சூப்பர் 8 சுற்றில் குழு ஒன்றில் இருந்து இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளன.
அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணியையும், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.