ஆசன ஒதுக்கீடுகளை பகிர்வதற்கான ஒரு வியூகமே பொது வேட்பாளர் நாடகம்: சிறீரங்கேஸ்வரன்

இந்தியத் தேர்தல் களம் தற்போது நிறைவை எட்டியிருக்கும் நிலையில் இலங்கைத்தீவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

வேட்பாளர் யார் என்ற கேள்வி அநேகமாக கேட்கப்பட்டு வரும் நிலையில் இந்தக் கேள்வி வடக்கில் பேசு பொருளாக மாறியுள்ளது.

தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை முன் வைக்க வேண்டும் என்ற யோசனைக்கு அமைவாக யார் அந்த பொது வேட்பாளர் என்பது தொடர்பில் பல கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன.

ஒரு சில அமைப்புகளும் அதற்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பொது வேலைத்திட்டத்தில் ஓர் அணியாக செயற்பட முடியாதவர்கள் பொது வேட்பாளர் விடயத்தில் எவ்வாறு ஒன்றுபட முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கான காலங்கள் நெருங்கிவரும் சூழலில் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாடு தொடர்பாக அக்கட்சிகளுடைய ஒருமித்த நிலைப்பாடு இன்னமும் முடிவுறாத நிலை காணமுடிகின்றது என அவர் தெரிவித்தார்.

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் ரெலோ அமைப்பு கிழக்கில் இருந்து ஓர் அறிக்கையை வெளியிட்டதன் பின்னர் அக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதற்கு எதிரான கருத்தை வெளியிட்டுள்ளார் என சுட்டிக்காட்டிய அவர், இதிலிருந்து பொது வேட்பாளர் தொடர்பில் ஒரு கட்சிக்குள்ளேயே ஒருமித்த நிலைப்பாடு நிலவவில்லை என்பது புலனாகின்றது என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

‘ஒவ்வொரு அணியினரும் ஒவ்வொரு நிலைப்பாடும் அதற்குள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணங்களில் கருத்துக்களும் நிலவிவருகின்றது.

ஆயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு அதில் ஆசன ஒதுக்கீடுகளை பகிர்வதற்கான ஒரு வியூகமாகவே இந்த பொது வேட்பாளர் என்ற நாடகத்தை அரங்கேற்றுகின்றனர்.

இலங்கையில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினராகவும் அடுத்த நிலையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாது தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் உள்ளனர் இதில் வடக்கு கிழக்கு நாடாளுமன்ற ஆசனங்களை கருத்தில்கொண்டு இக்கட்சிகள் பொது வேட்பாளர் தொடர்பில் முனைப்புக் காட்டுகின்றனர்.

ஜனாதிபதி என்பது நாட்டின் இறைமை, அரசியல் பொருளாதார மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது.

இத்தேர்தலில் தென்னிலங்கை தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே ஜனாதிபதியாக முடியும் என்பதும் இப்பொது வேட்பாளர் தொடர்பில் பேசுகின்ற தரப்பினருக்கு தெரியாத விடயமல்ல.‘ என ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் , தத்தமது நலன்களிலிருந்தே அவர்கள் இந்த நாடகத்தை அரங்கேற்றி பிழைப்பு நடத்த முனைகின்றனர் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin