மட்டக்களப்பு மாநகர சபையை இந்து மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக பிரதேச பொது அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மட்டக்களப்பு மட்டிக்கழி கடற்கரைப் பகுதியில் ஆலய தீ மிதிப்பின் போது மஞ்சள் குளிப்பதற்காக அமைக்கப்பட்ட அம்மன் பீடத்தைச் சுற்றியுள்ள காணியை மீன் வியாபாரி ஒருவர் சட்டவிரோதமாக அபகரித்து வாடி அமைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே குறித்த நபர் இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் அதற்கு அதிகாரிகளும் உடந்தையாகச் செயற்படுவதை வன்மையாகக் கண்டிப்பதுடன் மீன்வாடியை அகற்றாவிடில் முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டிக்கழி அறநெறி பாடசாலை கட்டிடத்தில் ஆலய பரிபாலன சபை மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து நேற்றைய தினம் முன்னெடுத்த ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்கள்,
“மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய தீ மிதிப்பின் போது மஞ்சள் குளிப்பதற்காக பார் வீதியிலுள்ள கடற்கரை பகுதியில் சட்ட ரீதியாக அம்மன் பீடம் அமைக்கப்பட்டு காலம் காலமாக அந்த பகுதியில் மீனவர்கள் கூட மீன்படி படகுகளை நிறுத்தாது, மாசடைய செய்யாது மீனவர்களும் ஆலய பரிபாலனசபையினரும் புனித பகுதியாக பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த காணியை மட்டு மாநகர சபை ஆணையாளர் மீன் வியாபரி ஒருவருக்கு மீன்வாடி அமைப்பதற்கு குத்தகைப் பணமாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்று உடன்படிக்கை மூலம் அனுமதியளித்ததையடுத்து அவர் அந்த பகுதியை அபகரித்து மீன் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்து மத்ததை இழிவுபடுத்தும் செயற்பாட்டை கண்டித்து, ஆலயப் பரிபாலன சபை மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மாதர் சங்கங்கள் மீனவர் சங்கங்கள், விளையாட்டு கழகங்கள் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், மாநகரசபை ஆணையாளர் உள்ளிட்டவர்களுக்கு கடித மூலமாகவும் நேரடியாகவும் தெரிவித்தனர்.
இதன் பின்னர் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக முறைப்பாடுகளைத் தெரிவித்தனர். ஆனால் அதற்கான தீர்வை பெற்றுதருவதாக தெரிவித்த போதும் எதுவிதமான தீர்வும் கிடைக்கவில்லை
இருந்த போதும் பிரதேச செயலாளருக்கு கீழ் உள்ள இந்த அரச காணியை பிரதேச செயலாளரின் அனுமதியின்றி எவ்வாறு மாநகரசபை, மீன்வாடி அமைக்க அனுமதி வழங்க முடியும், இது ஒரு மோசடியான செயல் என்பதுடன் இந்து மதத்தை இழிவுபடுத்தும் திட்டமிட்ட செயலாகும்.
இந்த இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயலுக்கு உறுதுணையாக சில அரச அதிகாரிகளும் மீன் வியாபாரியுடன் சேர்ந்து செயற்படுகின்றனர். எனவே காலம் காலமாக இந்த பகுதி மக்களும் ஆலய பரிபாலன சபையும் பராமரித்து வரும் அந்த புனித பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் மீன் வாடி, உடன் அகற்றப்பட வேண்டும் இல்லாவிடில் இந்து மக்களை அணிதிரட்டி மாநகர சபையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என பொது அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.