உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை, தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் தமது பயிற்சிகளை நிறைவுசெய்து புளோரிடாவிலிருந்து நியூயோர்க் செல்லும் வழியில் இடையூறுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் வெயிலான காலநிலைக்கு மத்தியில் போட்டியை நிறைவுசெய்ததன் பின்னர் இலங்கை மற்றும் அயர்லாந்து வீரர்கள் பயணித்த விமானம் நியூயோர்க்கை அடைவதற்கு சுமார் ஏழு மணி நேரம் தாமதமானதாக குறிப்பிடப்படுகிறது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை (31) இரவு 8 மணிக்கு நியூயோர்க்கை சென்றடைவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், மறுநாள் (01) காலை 5 மணியளவிலே சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து இலங்கை அணி பயிற்சியை இரத்து செய்வதற்கு நேரிட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த நிலைமையானது எதிர்வரும் போட்டிகளுக்கான தயார்படுத்தலை மேலும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், போட்டி நடைபெறும் மைதானத்தில் இருந்து இலங்கை அணிக்கு வழங்கப்பட்டுள்ள ஹோட்டலை சென்றடைவதற்கு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் ஆகுமெனவும் குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, இந்த விடயம் தொடர்பாக இலங்கை, தென்னாபிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.