இலங்கையில் 28 நீலக்கொடி கடற்கரைகள்

இலங்கையில் உள்ள 28 கடற்கரைகளை நீலக்கொடி அங்கிகாரம் பெற்ற கடற்கரைகளாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் ஐந்திற்கும் மேற்பட்ட நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் இலங்கையிலும் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நீலக்கொடி கடற்கரை (Blue flag beach) என்பது கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்காகவும் நாட்டின் முயற்சிகளை பாராட்டும் நோக்கில் வழங்கப்படும் சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரமாகும்.

நீரின் தரம், சுற்றுச்சூழல் முகாமைத்துவம் , சுற்றுச்சூழல் கல்வித் தகவல் மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகிய நான்கு முக்கிய கூறுகளின் அடிப்படையில் 32 அளவுகோல்களைப் பூர்த்தி செய்வதன் மூலம் நீலக்கொடி சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கமைய, முதற்கட்டமாக உனவட்டுன, பெந்தோட்டை, பாசிக்குடா மற்றும் அறுகம்பே ஆகிய கடற்கரைகளில் இந்த நீலக்கொடி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சின் ஆலோசனையின் பேரில் குறித்த இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்தத் திட்டத்திற்கு சுற்றுலாத்துறை அமைச்சு 32 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்படவுள்ளதுடன், கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஒழுங்குபடுத்தலுக்கமைய பாசிக்குடா கடற்கரை இந்த வருட இறுதிக்குள் நீலக்கொடி கடற்கரையாக மாற்றப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக கடலோர சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுதல், சுற்றுலா பயணிகளுக்கு போதிய வசதிகளை பெற்றுக்கொடுத்தல், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கை தரமும் மேம்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin