யாழ் தையிட்டியில் போராட்டக்காரர்களை அச்சுறுத்திய பொலிஸார்

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அங்கிருந்த பொலிசார் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து முன்னெடுத்துவரும் தொடர்போராட்டமானது ஆரம்பமாகி ஓர் ஆண்டை எட்டியுள்ளது.

இந்நிலையில் பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் பௌர்ணமி தின வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நேற்றுமுன்தினம் மாலை முதல் திஸ்ஸ விகாரைக்கு அருகாமையில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளர்களையும் அங்கிருந்த பொலிஸார் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டு வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது அவ்விடத்திற்கு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகை தந்தவேளை, “பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒரு கொலைகாரன், பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒழிக” என கூச்சலிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Recommended For You

About the Author: admin