இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய கால்நடை அறுவை சிகிச்சை நிபுணரான பிரின் பிரதாபன், அந்த நாட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய மிகப்பெரிய சமையல் போட்டியின் 20 ஆவது தொடரில் வெற்றிபெற்று மாஸ்டர்செஃப் செம்பியன் 2024 எனும் மகுடத்தை சூடிக்கொண்டுள்ளார்.
நடுவர்களான ஜோன் டோரோட்( John Torode) மற்றும் கிரெக் வாலஸ் ( Gregg Wallace) ஆகியோரால் மாஸ்டர்செஃப் வெற்றிக் கிண்ணம் பிரின் பிரதாபனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாஸ்டர்செஃப் சமையல் போட்டி வரலாற்றில் இரண்டு தசாப்தகால சிறந்த செம்பியன்களான தோமசினா மியர்ஸ், பீட்டர் பேலெஸ், ஜேம்ஸ் நாதன், மாட் ஃபோலாஸ், துருவ் பேக்கர், டிம் எண்டர்சன், ஷெலினா பெர்மல்லூ, சலிஹா மஹ்மூத் அகமது, கென்னி டட், ஐரினி, தோமஸ் ப்ரக், டொம் ரொடெஸ், எட்டீ ஸ்கொட், சரியா கட்டியோட் ஆகியோர் வரிசையில் 29வயதான பிரின் இணைந்துள்ளார்.
எட்டு வாரங்கள், 57 சக போட்டியாளர்களைக் கடந்து கடினமான சவால்களுக்கு மத்தியில் பிரின் இந்த வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தமது பின்னணி, கலாசாரம் மற்றும் பெற்றோரின் ஊக்குவிப்பே இந்த வெற்றிக்கு காரணம் என பிரின் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்தமைக்காக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோருக்கு பிரின் நன்றி தெரிவித்ததுடன், அற்புதமான காரமான சமையல் பின்னணியை பெற்றோரிடமிருந்து பெற்றதில் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரின் ஒரு அசாதாரண சமையல்காரர் எனவும் அற்புதமான திறைசாலி எனவும் மாஸ்டர்செஃப் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான ஜான் டோரோட் குறிப்பிட்டுள்ளார்.