உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை செல்லுபடியற்றதாக்குமாறு பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும்உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வழக்குகள் விசாரணைகள் காணப்படுகின்ற நிலையில் தேர்தலை நடத்த முடியாது என இராஜாங்க அமைச்சர் வக்கும்புர தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் இதுதொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து அண்மையில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்வது குறித்தும், பழைய முறையின் கீழ் அடுத்த வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலும் முக்கிய தரப்பினருடன் கலந்தாலோசிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் பெரும்பாலான அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்ற நிலையில் அவர்கள் தொழில் நடவடிக்கைகளின் போது சிரமங்களை எதிர்கொள்வதாக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கூறப்படுவதாக ஜனாதிபதி பிரதமரிடம் தெளிவுபடுத்தியதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
எனவே இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று, ஏனைய கட்சிகளுடனும் கலந்தாலோசித்து வேட்புமனுவை இரத்து செய்வது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி அறிவித்ததாகவும் அவர் கூறினார்.
“தேர்தல் மோகத்தினூடாக தனது சொந்த அரசியல் இலக்குகளை அடைவதற்காக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்” எனவும் விமர்சனங்கள் எழுந்தன.
அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல் இடம்பெறுவதுடன் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினரும் இது குறித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
முன்னதாக உள்ளூராட்சித் தேர்தல் திகதியையும் மூன்று மாதங்களுக்கு முன்னரே தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. ஆனால் தற்போது வரை தேர்தல் இடம்பெறவில்லை இதுபோன்ற நிலைதான் ஜனாதிபதித் தேர்தலும் என்ற ஒரு நிலைப்பாடும் பலரது மத்தியில் காணப்படுகின்றது.